வியாழன், 24 அக்டோபர், 2013

பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் - ஏனிந்த பாரபட்சம்?


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மூலமாக நடத்தப்படும் பா்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. உத்தரவு தான் வந்தது. கட்டிடமும் வரவில்லை. ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. உத்தரவிட்ட அரசு இவற்றையும் உடனே செய்துவிடும் என நம்பி, மாணவர் சேர்க்கையும் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு நிறைவு செய்தோர் மற்றும் தேவர்மலை, ஒசூர் ஆகிய இரண்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் என பதினொன்றாம் வகுப்பில் 89 பேர் சோ்ந்தனர். ஓராண்டாகியும் ஆசிரியரும் வரவில்லை. கட்டிடமும் வரவில்லை.
இம்மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், அரசிடமும் முறையிட்டு சலித்துப்போயினர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களே அவ்வப்போது பாடங்களை நடத்தி வந்தனர். இவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. சமவெளிகளில் பணிரெண்டாம் வகுப்பு பாடங்களை 11 மற்றம் 12 என இரண்டு ஆண்டுகள் படிக்கும் நிலையில் இந்த பழங்குடி குழந்தைகளின் அவலத்தை யாரிடம் சொல்வது. இந்நிலையில் ஆண்டிறுதியில் ஒரு ஆசிரியர் மட்டும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வெழுதி தேர்வானவர்கள். இதே பள்ளியில் 55 பேரும், தேர்மலை உயர்நிலைப்பள்ளியில் 75 பேரும், ஒசூர் உயா்நிலைப்பள்ளியில் 25 பேரும் என 155 போ் பத்தாம் வகுப்பு தேர்வான நிலையில், இவ்வாண்டு வெறும் 45 போ் மட்டுமே சேர்ந்துள்ளனர். ஆசிரியா்கள் இல்லாத இப்பள்ளியில் யார் தான் சேர்ப்பார்கள்.
பா்கூர் மலைப்பகுதியில் மேல்நிலைப்பள்ளி என்பது இப்பகுதி மக்களின் நெடுங்கனவு. கனவு நனவாகியுள்ள நிலையில் நோக்கம் நிறைவேறவில்லையே எனும் ஏக்கம் சகலருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாண்டு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் மேல்நிலைப்பள்ளிகளில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பெற்றோர் ஆசிரியா் கழகத்தின் மூலமாக தாற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என ஒரு உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 45 தாற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் இப்பள்ளியின் அவலம் மட்டும் இன்னும் நீங்கவில்லை.

காரணம் இந்த உத்தரவு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு மட்டும் தானாம். பழங்குடியினர் பள்ளிகளுக்க பொறுந்தாதாம். இதற்கு யார் தான் பொறுப்பு? இவ்வாண்டு 11க்கும் பொதுத்தேர்வு, 12க்கும் பொதுத்தேர்வு. இது மட்டும் இவர்களுக்கும் பொறுந்துமாம். இந்த பழங்குடி மாணவர்கள் நீட் தேர்வெழுத எப்படி செல்வார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழங்குடியினர் பள்ளியில் 30 ஆண்டு காலமாக தொடரும் அவலம்…

ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டு காலமாக தொடரும் அவலம்…