திங்கள், 23 அக்டோபர், 2017

பாடமும் படிப்போம், பயிறும் வளர்ப்போம்...!

மலைக்கிராம பள்ளிகளில் மாணவா்களுக்கு பாடத்துடன் வேளாண்மையையும் கற்றுத்தந்துகொண்டுள்ளது சத்திமயங்கலம் சுடர் அமைப்பு.





ஆம், கடந்த பத்தாண்டுகளாக ஈரோடு மாவட்ட மலைக்கிராமங்களில் கல்வித்தளத்தில் இயங்கி வரும் சுடா் அமைப்பானது, வீரப்பனின் தீவிர நடமாட்டத்தில் இருந்த தாளவாடி, சத்தியமங்கலம் கடம்பூா் மலைப்பகுதி, அந்தியூா் பா்கூா் மலைப்பகுதிகளில் பத்து கிராமங்களில் மத்திய அரசின் தேசிய குழந்தைத்தொழிலாளா் திட்ட சிறப்புப்பள்ளிகளை 2009ஆண்டு முதல் நடத்தி வருகிறது. குறிப்பாக இங்கு வாழும் பெரும்பகுதி பழங்குடியின மக்கள் பிழைப்பு தேடி, சத்திமங்கலம், கோபி, ஈரோடு பகுதிகளுக்கு கரும்பு வெட்டுதல், செங்கல் சூளைகளுக்கு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்றுவிடுவர். வேலைக்கு செல்லும்போது இவா்களது குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவிடுவது வழங்கம். இவா்களை மீட்டு,  மலைப்பகுதிகளில் உள்ள இவா்களது வாழிடங்களிலேயே சிறப்புப்பள்ளிகளை அமைத்து இவர்களுக்க கல்வி வழங்கி வருகின்றனா். அரசுப்பள்ளிகளில் உள்ள அதே பாடதிட்டம், மதிய உணவு, பள்ளிச்சீருடை, 14 வகையான இலவச பொருட்கள் அனைத்தும் இவா்களுக்கும் கிடைக்கும். குறிப்பாக மதிய உணவிற்கு, அதாவது இந்த சத்துணவிற்கு காய்கறி வாங்கிட ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 36 காசுகள் மட்டுமே வழங்கப்படும். விந்தையென்னவெனில், அதுவும், செலவு செய்தபின் ஆண்டுக்கொரு முறை வழங்குவார்கள். அரசு வழங்கும் இந்த 36 காசுகளை வைத்து இன்றைக்கு விற்கிற விலைக்கு கரிவேப்பிலை வாங்கலாம், காய்கறி வாங்கிட முடியாது. என்ன செய்வது.
பிரச்சினையும், தீர்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். 36 காசு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை இப்போதைக்கு மாற்ற முடியாது, என தாற்காலிக தீர்வை யோசித்தோம். நாங்கள் ஏற்படுத்தியுள்ள பள்ளிகள் அனைத்துமே மக்களின் குடியிருப்பில் தான் உள்ளன. ஆக, பள்ளி வளாகங்களில் உள்ள காலியிடங்களில் காய்கறி தோட்டங்களை அமைத்திட முடிவெடுத்தோம். அப்போது உதயமானது தான் இந்த ”பள்ளிகள் தோறும் நஞ்சல்லா காய்கறி தோட்டங்கள்” அமைக்கும் திட்டம்.
சமீப காலங்களாக இரசாயன உரப்பயன்பாடு, அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகிய காரணங்களால் ஏற்படும் விளைவுகளை நன்கறிவோம். தாய்ப்பால் கூட நஞ்சாகிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் விஷத்தை மிகுதியாக இருப்பதால், தமிழக காய்கறிகளை நாங்கள் வாங்க மாட்டோம் என அண்மையில் கேரள மாநிலத்திலிருந்து வந்த அபாய அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியதை நன்கறிறோம். இதற்கு மாற்றாக கேரள அரசு இல்லங்கள் தோறும், தோட்டக்கலைத்துறை மூலமாக இயற்கை முறையில் காய்கறிகளை வளா்த்திட மானியத்துடன் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் அவ்வாறான திட்டம் ஏதும் உண்டா?
ஆகவே, இயற்கை வேளாண்மையை மாணவா்களுக்கு செயல்வழியில் கற்றுத்தர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. செயலில் இறங்கினோம். எங்களது நிறுவனத்தின் மூலம் நடைபெற்றவரும் பள்ளிகளான குன்றி, விளாங்கோம்பை, பா்கூர் கொங்காடை பகுதிகளில் உள்ள பத்து பள்ளிகளில் நஞ்சில்லா காய்கறி தோட்டங்களை அமைக்கத்தொடங்கினோம். மாணவர்களைக்கொண்டு, நம்மாழ்வார் எங்களுக்கு கற்றுக்கொடுத்த முறையில் இருமடிப்பாத்தி அமைத்தோம். விதைகளைத்தூவினோம். தினமும் ஒரு மணி நேரம் வேளாண்மைக்காக ஒதுக்கப்பட்டது. இதில், மண்ணை வளப்படுத்துதல், பயிர் வளா்ச்சி ஊக்கிகளாக பஞ்சகாவ்யா, அமுதக்கரைசல் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரித்தல் குறித்த பயிற்சிகளை வழங்கினோம்.
இந்த இருமடிப்பாத்தியில் வெந்தயம், கீரை விதைகள், காய்கறி விதைகள் என பல விதைகளைத்தூவி தண்ணீர் தெளித்ததில், விதை தூவிய ஏழாவது நாளில் வெந்தயக்கீரை, 15வது தினத்தில் செங்கீரை, 30வது தினத்தில், வெண்டையும், தக்காளியும் கிடைத்தது. விதைத்த இந்த மாணவனுக்கோ இவ்வளவு விரைவாக தான் விதைத்த விதை கொடுத்த விளைச்சளைக்கண்டு ஏக சந்தோஷம். விளைந்த காய்கறிகளை பள்ளிகளில் சத்துணவில் சோ்த்தோம். காரியம் ஒன்று. விளைவுகள் மூன்று. முதலாவதாக, மாணவர்கள் உழைப்பின் அவசியத்தை உணத்தியது. உழைப்பால் உடல் உறுதியுடன் மனதிற்கும் ஆரோக்கியம் கிட்டியது. இரண்டாவது, இப்பணிகளினூடே, இயற்கை விவசாய நுட்பங்களை நன்கு அறிந்து, நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்தது. மூன்றாவது, உற்பத்தியானவற்றை சத்துணவில் சேர்த்து உண்ணும்போது உடல் ஆரோக்கியம் பெறுதல்.
ஆம், எங்களது பள்ளிகளில் கிடைத்த வெற்றி அனுபவத்தை ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் தெரிவித்தோம். அவரோ, ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக செயல்படும் சுற்றுச்சூழல் மன்றங்களுக்கும் கொண்டுசெல்ல பயிற்சிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இதன்படி  450 சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியா்களுக்கும் ”பள்ளிகள் தோறும் நஞ்சல்லா காய்கறி தோட்டங்கள்” அமைத்திட பயிற்சிகள் வழங்கப்பட்டன.


வோ்களை மறக்காதீர்கள்…!
அரசுப்பள்ளிகளில் பயிலும் பெரும்பகுதி மாணவர்கள் கிராமப்புறங்களில் குறிப்பாக வேளாண் குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் மாணவர்களே. ஆனால், இன்றைய பாடத்திட்டம் இவா்களை வேளாண்மையிலிந்து அந்நியப்படவே செய்கிறது. காலையில் எழுந்தவும் பள்ளிக்குச்சென்று படிப்பு, பாடமேன படித்து, மாலை வீட்டுப்பாடம் படித்து, விடுமுறைகளில் தேர்வுக்குப்படித்து என முழுக்க முழுக்க பாடபுத்தகங்களிலேயே மூழ்கிவிடுகின்றனர். காட்டில் இறங்கி பெற்றோருடன் வேலைபார்ப்பதே இல்லை. இந்த மண்ணோடு இருந்த இவர்களுக்கான உறவு துண்டிக்கப்படுகிறது. இப்படியே சென்றால், கடலை எந்த மரத்தில் காய்கிறது என எதிர்கால குழந்தைகள் கேட்பர். ஆனால், பத்தாம் வகுப்போ, 12ஆம் வகுப்போ படித்து பாதியில் நிற்பவர்கள் திரும்பவும் வீடு திரும்பும்போது, தங்களின் பாரம்பரிய தொழிலான வேளாண்மையையும் மறந்து, படித்த படிப்பிற்கு வேலையும் கிடைக்காமல் பலர் அலைவதை நாம் காண்கிறோம்.



இங்கு தான் காந்தி நினைவுக்கு வருகிறார். ஆம், அவா் சொன்ன ஆதார கல்வித்திட்டம்.
இயற்கை வேளாண்மையை மாணவப்பருத்திலேயே கற்றுக்கொடுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. மேலும், வகுப்பறையில் சொல்லித்தரும் பாடமாக மட்டுமின்றி, காட்டில் சென்று ஒரு செடியின் வேர் ஈரத்தையும், காற்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறது, செடியின் இலை சூரிய ஒளியை எடுத்து எப்படி ஒளிச்சோ்க்கை மூலம் சமைக்கிறது என்பதை விளக்கும் போது மாணவா்களுக்கு அறிவியலை புரிய வைப்பது எளிது.
மேலும், இந்த ”பள்ளிகள் தோறும் நஞ்சல்லா காய்கறி தோட்டங்கள்” திட்டத்தினால், மூன்று முக்கிய விளைவுகள் ஏற்படுகின்றன. மாணவா்களுக்கு இயற்கை வேளாண் நுட்பங்கள் குறித்த பயிற்சி, சத்துணவிற்கு தேவையான காய்கறிகள் அதுவும் நஞ்சில்லாத காய்கறிகளாக கிடைக்கின்றன.

இதனை தமிழகத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் கூட விரிவாக்கிடலாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழங்குடியினர் பள்ளியில் 30 ஆண்டு காலமாக தொடரும் அவலம்…

ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டு காலமாக தொடரும் அவலம்…